பாஜக தலைவர் ஒன்றிய அரசோடு பேசி நீட் இல்லை என அறிவித்தால் மகிழ்ச்சியோடு வரவேற்போம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
MaSubramanian

பாஜக தலைவர் ஒன்றிய அரசோடு பேசி நீட் இல்லை என்று அறிவித்தால் மகிழ்ச்சி தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சைதாபேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

தமிழ்நாட்டில் தற்போது 1,060 தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன என்றும், இது சென்னையில் மட்டும் தான், மற்ற 37மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை. தமிழ்நாட்டில் இன்றுவரை 1,01,63,000 டோஸ் தடுப்பூசிகள் மாநிலத்திற்கு வந்துள்ளது. இதுவரை 97,62,957 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக, தடுப்பூசிகள் இல்லை என்று அரசு கூறி வருகிறது. மேலும் தற்போதுள்ள தடுப்பூசிகள் குறித்த தகவல்களைப் பகிர வேண்டாம் என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது, ஆனால் நாங்கள் மக்களுக்கு தகவல் தெரிவிக்காவிட்டால், அவர்கள் தடுப்பூசி மையத்திற்குச் சென்று, ஏமாற்றம் அடைவார்கள். எனவே மக்களிடம் தடுப்பூசி குறித்து உண்மையைச் சொல்வது நல்லது.

ஜூன் மாதத்திற்கு ஒன்றிய அரசு 37 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்துள்ளது, அதில் ஜூன் 13-க்குள் 6.5 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய தகவல்களின்படி, மாநிலத்திற்கு 85,000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி கிடைத்துள்ளது, இதை மாவட்டங்கள் அனைத்திற்கும் விநியோகிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தொற்று பரவுவதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு அதிக தடுப்பூசிகளை ஒதுக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் தொற்றுநோய் பரவுவது குறைந்து வருகிறது. இதில் நேற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,321 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் நேற்று ஒரே நாளில், 31,253 பேர் குணமடைந்து வீடு திரும்பியள்ளனர். 10 நாட்களுக்கு முன்பு, மாநிலத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பிய நிலையில், தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, அரசு மற்றும் பிற பொது மருத்துவமனைகளில் 45,000 க்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக உள்ளன. இந்த வைரஸை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவோம், மக்கள் கொரோனா வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும், மாநிலத்தில் பாதிப்பு குறைந்து வருவதால் அலட்சியமாக இருக்கக்கூடாது

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை வெளியிட முதல்வர்  ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், பாஜக தலைவர் ஒன்றிய அரசோடு பேசி நீட் இல்லை என்று அறிவித்தால் மகிழ்ச்சி தான். 37 மாவட்டங்களில் தடுப்பூசி இல்லை. பேரிடருக்கு தேவையான மருந்துகள் போதிய அளவு கையிருப்பில் உள்ளது. 9.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

From around the web