நடவடிக்கை எடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்... குடிபோதையில் காவலர்களிடம் ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி!

 
Thirukovilur

திருக்கோவிலூர் போக்குவரத்து காவலர்களிடம் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள போக்குவரத்து காவல் நிலையம் எதிரே நேற்று மாலை போக்குவரத்து காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை நிறுத்தி சோதனை செய்கையில், அவர் மதுபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரின் வாகனத்திலிருந்து சாவியை எடுக்க முயன்ற போலீசாரிடம், நான் பாஜகவின் திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர்; என் மீது நடவடிக்கை எடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் சற்றும் எதிர்பாராத நேரத்தில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட முயன்றவரை சட்டம் ஒழுங்கு போலீசாரின் உதவியோடு அப்புறப்படுத்தி காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு விசாரிக்கையில் அவர் பெயர் சண்முகவடிவேல் என்பதும், அவர் பாஜகவில் திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும், இவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியது, பொதுமக்களுக்கு இடையூறு செய்தது என இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் பேருந்து நிலையம் அருகே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

From around the web