தமிழக மக்களின் நலனுக்காக உழைப்பேன்... யாராலும் தடுக்க முடியாது - சசிகலா அதிரடி!

 
Sasikala

தமிழக மக்களின் நலன் மற்றும் கட்சியின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன், அதை யாராலும் தடுக்க முடியாது என சசிகலா ஆடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அதிமுக தலைமை பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

சரி அமமுகவை வலுப்படுத்தி தேர்தலை சந்தித்து அதிமுகவின் வாக்குகளை பிரிப்பார் என கருதப்பட்டது ஆனால் அவரோ ஒரு நாள் இரவு திடீரென அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் நான் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன். அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடுங்கள் என தெரிவித்திருந்தார். இதனால் சசிகலா நிரந்தரமாக விலகுகிறேன் என சொல்லாமல் ஒதுங்குகிறேன் என சொல்லியுள்ளதால் காலம் கனியும் போது எப்போது வேண்டுமானாலும் அவரது ஆட்டத்தை ஆரம்பிப்பார் என்றே சொல்லப்பட்டது.

அரசியலில் இருந்து விலகுவதாக கூறிய சசிகலா தற்போது ஆடியோவாக வெளியிட்டு வருகிறார். ஒன்று, இரண்டு என்று இருந்த ஆடியோ தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

முதல் ஆடியோவில் கவலைப்படாமல் இருங்கள், நான் கொரோனா முடிந்ததும் வந்து விடுகிறேன் என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து அரசியலுக்கு வருவது என்ற ரீதியில் அவரது ஆடியோக்கள் இருந்தன.

மதுரை சேர்ந்த அன்பழகன் என்பவர் சசிகலாவுடன் பேசும் ஏழாவது ஆடியோ கடந்த 4-ம் தேதி வெளியாகி இருக்கிறது. அதில், தொண்டர்களின் மனகுமுறல் கடிதம் மூலம் தெரிய வருகிறது என்றும், ஜெயலலிதா சொல்லியது போல 100 ஆண்டுகள் ஆட்சிக்கு இருக்க வேண்டும் என்பதை நான் கட்டி காக்க வேண்டும் அது தான் தன்னுடைய ஒரே எண்ணம் என்றும் சசிகலா பேசியிருந்தார்.

தொண்டர்கள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது என்று கூறும் சசிகலா, தைரியம் என்னுடன் பிறந்தது, நிச்சயம் வருவேன் தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.

ஆனால் சசிகலா குழப்பத்தை ஏற்படுத்த பார்ப்பதாக அதிமுக குற்றம் சாட்டியது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இல்லை என உறுதிப்பட தெரிவித்தார்.
 
இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் சசிகலா அமமுக தொண்டர்களிடம் தான் பேசுகிறார், அதிமுக தொண்டர்களிடம் பேசவில்லை என கூறினார். அரசியலை விட்டு விலகியவர், ஏன் மறுபடியும் வருவதாக கூறுகிறார் என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் தமிழக மக்களின் நலன் மற்றும் கட்சியின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன், அதை யாராலும் தடுக்க முடியாது என சசிகலா பேசியுள்ள ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web