ஐயப்பன் மீது சத்தியம்; நகைகளை உருக்குவதில் முறைகேடு நிகழாது - அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

 
SekarBabu

ஐயப்பன் மீது சத்தியமாக கோவில் நகைகளை உருக்குவதில் முறைகேடு நிகழாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள வள்ளலார் ராமலிங்கம் அடிகளாரின் நினைவு இல்லத்தை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

திருக்கோவில்களுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டு பயன்பாடின்றி இருக்கும் நகைகளை கணக்கிட உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகாலமாக கோவில்களுக்கு காணிக்கையாக வந்த நகைகள் அப்படியே தேங்கிக்கிடப்பதாக கூறிய அவர், தெய்வ வழிபாட்டுக்கு பயன்படும் நகைகளை மட்டும் கணக்கிட்டு தெய்வங்களுக்கு பயன்படுத்த உத்தேசித்துள்ளதாக கூறியிருக்கிறார்.

தெய்வ வழிபாட்டுக்கு தேவைப்படாத நகைகள் மற்றும் உடைந்த நகைகளை ஒன்றிய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலைக்கு அனுப்பி வைத்து தங்கக்கட்டிகளாக உருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

கோவில் நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றும் விவகாரத்தில் இம்மியளவு கூட தவறு நிகழாது என்றும் இது தான் வணங்கும் ஐயப்பன் மீது சத்தியம் எனவும் அமைச்சர் சேகர்பாபு உறுதியிட்டார். கோவில் நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றும் நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைச்சர் சேகர்பாபுவின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தங்கக்கட்டிகளை வைப்பு நிதியாக வைத்து அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையை முழுமையாக கோவில் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் இந்த திட்டம் முழுக்க முழுக்க வெளிப்படைத்தன்மையோடு செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார்.

கோவில் நகைகளை தங்கக்கட்டிகளாக மாற்றும் திட்டத்தை சென்னை, திருச்சி, மதுரை என 3 மண்டலங்களாக பிரித்து அதை செயல்படுத்துவதற்கு நீதிபதிகளை நியமித்துள்ளதாகவும் கூறினார்.

திருப்பதி கோவிலில் கூட இந்த நடைமுறை தான் பினபற்றப்படுவதாகவும், தமிழ்நாட்டில் கடந்த 1977-ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை பின்பற்றப்பட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தான் இது கைவிடப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

மதத்தை, இனத்தை வைத்து அரசியல் பேசக்கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் கோவில் நகைகளை பயன்படுத்தாமலே வைத்திருந்தால் யாருக்கு என்ன லாபம் கிடைத்துவிடப்போகிறது எனவும் வினவியுள்ளார்.

From around the web