நான் சசிகலா பேசிறேன்..! அதிமுக தொண்டர்களை குழப்ப முயற்சி... சசிகலா நினைப்பது நடக்காது! கே.பி.முனுசாமி

 
Munusamy-Sasikala

அதிமுக தொண்டர்களை திசை திருப்பி தொண்டர்களை குழப்ப முயல்கிறார் சசிகலா என்றும் அவரது எண்ணம் பலிக்காது என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அதிமுக தலைமை பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. சரி அமமுகவை வலுப்படுத்தி தேர்தலை சந்தித்து அதிமுகவின் வாக்குகளை பிரிப்பார் என கருதப்பட்டது ஆனால் அவரோ ஒரு நாள் இரவு திடீரென அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் நான் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன். அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடுங்கள் என தெரிவித்திருந்தார். இதனால் சசிகலா நிரந்தரமாக விலகுகிறேன் என சொல்லாமல் ஒதுங்குகிறேன் என சொல்லியுள்ளதால் காலம் கனியும் போது எப்போது வேண்டுமானாலும் அவரது ஆட்டத்தை ஆரம்பிப்பார் என்றே சொல்லப்பட்டது.

இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு இபிஎஸ், ஓபிஎஸ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இருவரும் விட்டுக் கொடுக்க முடியாது என சண்டையிட்டு கொண்டனர். இருவரும் தனித்தனி லெட்டர் பேடில் அறிக்கைகளை வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.

இந்த சூழ்நிலையில் சசிகலா விஸ்வரூபம் எடுத்து வருகிறார். சசிகலா, தொண்டர்களுடன் செல்போனில் பேசும் ஆடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சசிகலா தொண்டர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோபால் என்ற தொண்டரிடம், சசிகலா பேசிய செல்போன் உரையாடல் நேற்று வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், ஒன்றும் கவலைப்படாதீங்க, கட்சியைக் கண்டிப்பா சரி பண்ணிடலாம், கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது, கொரோனா குறைந்த பிறகு எல்லோரையும் சந்திக்கிறேன் என்று கூறினார். இது அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் நிருபர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, “சசிகலாவின் பேச்சுக்கு ஒரு அ.தி.மு.க தொண்டர் கூட செவி சாய்க்க மாட்டார், அதிமுகவை திசை திருப்பி தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி செய்கிறார். அவரது எண்ணம் ஈடேறாது, ஒரு தொண்டரும் சசிகலாவிடம் பேசவில்லை. மாறாக சசிகலா தான் அவர்களிடம் பேசி வருகிறார்” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், சசிகலா பேசும் நபர்கள் அமமுகவை சேர்ந்தவர்கள் என்ற கே.பி.முனுசாமி, ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையவாவது சசிகலா குடும்பம் அதிமுகவில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

From around the web