தங்கையையும் கட்டித்தர வேண்டும்.. வரதட்சணைக் கொடுமை.. கதறி அழுத பெண் எடுத்த விபரீத முடிவு !

 
தங்கையையும் கட்டித்தர வேண்டும்.. வரதட்சணைக் கொடுமை.. கதறி அழுத பெண் எடுத்த விபரீத முடிவு !

தனது தங்கையை கணவனின் தம்பிக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்ற காரணத்தால் பெண் எடுத்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி கோவில்பட்டியைச் சேர்ந்த சுஜா(29) எம்.ஈ பட்டதாரி ஆவார். இவருக்கும் விருதுநகர் மாவட்டம் மணிப்பாறைப்பட்டியைச் சேர்ந்த வீரராகவனுக்கும்(31) கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. வீரராகவன் ஆட்டோ மொபைல் ஷோரூம் வைத்துள்ளார். இந்த தம்பதிக்கு 7 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், வீரராகவனின் சகோதரர் கார்த்திக் என்பவருக்கு சுஜாவின் தங்கையை பெண் கேட்டுள்ளனர். ஆனால் சுஜாவின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்து விட்டனர். இதனால், வீரராகவன் மற்றும் அவரது பெற்றோர் கந்தசாமி - அமுதா தம்பதி குடும்பத்தினர் சுஜாவைத் துன்புறுத்தத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

அதேபோல் உறவினர்களும் பெண் கேட்டு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் கூடுதலாக வரதட்சணை வேண்டும் என்று கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

கொடுமைகளை பொறுக்கமுடியாத சுஜா இதனை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். எனினும் சித்ரவதை அதிகரித்ததால் சுஜா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் தனது கணவர் வீரராகவன், சுஜாவுக்கு செல்போனில் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் சுஜா, தனது படுக்கையறையில் சுஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்பாக, கணவர், மாமியார் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதற்காக தான் இந்த முடிவை எடுப்பதாகவும் தனது குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் எனவும் கதறி அழுதபடி ஒரு வீடியோ பதிவு செய்து அதை பெற்றோருக்கும், கணவர் வீட்டாருக்கும் அனுப்பி விட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இதனால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தனது மனைவி இறந்ததற்கு கூட வீரராகவன் வரவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் செல்போன்களை அணைத்து வைத்து விட்டதாகவும் சுஜாவின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக அவர்கள் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web