எனக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை - எடப்பாடி பழனிசாமி

 
EPS

எனக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

சசிகலா அதிமுகவில் இல்லை, அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்துவிட்டார் என கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வேண்டுமென்றே குழப்பத்தை விளைவிப்பதற்காக சசிகலா பேசியதாக ஆடியோ வெளியாகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஜெயக்குமார் உள்ளிட்ட 9 மாவட்ட செயலாளர்களுடன், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,

கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினோம். கொரோனா பரிசோதனை முடிவுகளை தெரிவிக்க 3 முதல் 4 நாட்கள் ஆவதாகவும், ஒரே நாளில் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் முதல்வராக இருந்த காலகட்டத்தில் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டன. அனால் தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கையோ பரிசோதனைகளின் எண்ணிக்கையோ போதாது. கடந்த ஆட்சியில் 24 மணி நேரமும் கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டு வந்தது. தற்போது பரிசோதனை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் நோய் பரவல் அதிகரிக்கிறது.

அதேபோன்று கடந்த ஆட்சியில் வீடுவீடாக சென்று பொதுமக்களை சந்தித்து, நோய் அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்டறியும் சோதனைகள் நடைபெற்றது. ஆனால் இந்த முறை பொதுமக்களை சந்தித்து நோய் அறிகுறிகள் இருப்பவர்களின் கணக்குகள் எடுக்கபடவில்லை என்ற தகவல்கள் வருகிறது.

தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் தடுப்பூசியை வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்

அரசியலைவிட்டே விலகுவதாக அறிவித்து விட்ட சசிகலாவின் பெயரில், வேண்டுமென்றே குழப்பத்தை விளைவிப்பதாக ஆடியோ வெளியிடப்படுகிறது.

இன்று அதிமுக பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. இதில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.

சென்னையில் புது வீட்டுக்கு இடம் பெயர்ந்ததால் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை. அனைத்து நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டம் இன்று நடைபெறவில்லை.

சில விவகாரங்களில் எதிர்க்கட்சித் தலைவராக நான் பதில் கூற வேண்டியிருக்கும். சில விவகாரங்களில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அவர் சில பதில்களை தெரிவிப்பார். இது அவ்வளவு தானே ஒழிய, எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

அம்மாவின் ஆட்சி காலத்திலேயே அமைச்சர்கள், நிர்வாகிகள், அவர்கள் தொடர்புடைய விஷயங்களுக்கு அறிக்கையின் மூலம் பதிலளித்த சம்பவங்கள் உண்டு. அப்போதெல்லாம் கேள்வி எழவில்லை. இப்போது வேண்டுமென்றே இது போன்ற கேள்விகளை எழுப்புகிறார்கள்” என கூறினார்.

From around the web