கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தக் கூடாது;  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

 
Drainage

மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்தக் கூடாது; விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உரிய நிவாரணம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்’ எனக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் ஏற்கெனவே தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, “இத்தகைய உயிரிழப்புகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தாலும், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Drainage

மனித கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவது மனித தன்மையற்ற செயல். மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் பி.முத்துக்குமார்,  “தற்போது இந்தப் பணியில் ஒருவரையும் ஈடுபடுத்துவதில்லை. கழிவுகளை அகற்றுவதில் இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்படுகிறது” என்றார்.

High-Court

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை 6 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

From around the web