முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு நோட்டீஸ் - உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

 
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு நோட்டீஸ் - உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் மு.க.அழகிரிக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி உள்ளது. அதன் அருகே உள்ள நிலத்தை கல்லூரி நிர்வாகம் அபகரித்ததாக, மு.க.அழகிரி உள்ளிட்டவர்கள் மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டடுள்ளது. இந்த புகாரின் பேரில் மு.க.அழகிரி, சம்பத்குமார் உள்பட 7 பேர் மீது நில அபகரிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு, 2019-ம் ஆண்டு முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பல்வேறு கட்டங்களாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில்,கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கில் இருந்து மு.க.அழகிரி மீது பதியபட்ட சில பிரிவுகள் பொருந்தாது எனவும், அந்த பிரிவுகளில் இருந்து விடுவித்தும் நீதிபதி உத்தரவிட்டனர்.

இதனையடுத்து மதுரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 465, 468, 471 கீழ் வழக்கு பதிவு செய்ததில் முகாந்திரம் இல்லை என இந்த வழக்கில் இருந்து மு.க. அழகிரி விடுவிக்கப்பட்டு உள்ளார். இது ஏற்புடையது இல்லை என்றும் குற்றப்பத்திரிக்கையில் தெளிவாக கூறப்பட்டு உள்ளது என்றும் குறிப்பிட்டனர்.

எனவே மதுரை மாவட்ட நீதிமன்றம் நில அபகரிப்பு வழக்கில் இருந்து மு.க.அழகிரியை விடுவித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறி உள்ளது.

இந்த வழக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரம் ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

From around the web