ஹெலிகாப்டர் விபத்து: முப்படைகளின் முழு விசாரணை அறிக்கை தாக்கல்!!

 
Coonoor-helicoptor-crash

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான முப்படைகளின் முழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குன்னூர் அருகே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த விமானி வருண் சிங், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இதனிடையே இந்த விபத்து குறித்து விமானப்படை அதிகாரி மானவேந்திர சிங் தலைமையிலான விசாரணைக் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில் ஹெலிகாப்டர் விபத்திற்கு மோசமான வானிலையே முக்கிய காரணம் என்றும், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் எந்தவித தொழில்நுட்ப குறைபாடும் இல்லை எனவும் அண்மையில் விசாரணையில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பான முப்படைகளின் முழு விசாரணை அறிக்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் நேரடியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விமானப்படை அதிகாரி மானவேந்திர சிங் தலைமையிலான முப்படை குழு விசாரணை அறிக்கையை அளித்தது. ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணங்கள் குறித்த விவரங்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேகக்கூட்டங்கள் வந்ததால் தான் தரையிறைங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக இந்த விபத்து என்பது நிகழ்ந்ததாக இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஒரு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

From around the web