கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

 
கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் காக்கும் மருந்தாக ரெம்டெசிவிர் மருந்து மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்தை வாங்கிச் செல்வதற்காக, மருத்துவமனைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. நேற்று தாம்பரம் பகுதியில் போலீசார் நடத்தி சோதனையில் ஒரு மருத்துவர் உள்பட 3 பேர் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பதற்காக வாங்கிச் சென்ற போது கைது செய்யப்பட்டனர்.

மேலும் இது தொடர்பாக திருவண்ணாமலை அரசு மருத்துமனையில் பணிபுரியும் கம்பவுண்டர் ஒருவரும் போலீசாரால் இது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ரெம்டெசிவிர் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்தை கட்டாயமாக கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், மருத்துவர்களின் பரிந்துரைப்படி மட்டுமே அந்த மருந்து தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கான தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால் 18 முதல் 44 வயது உள்ளவர்களுக்கு தேவையான தடுப்பூசிக்கு நிறுவனங்களிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த தடுப்பூசிகள் வந்தால் தான் பொதுமக்களுக்கு செலுத்த முடியும் என்றும் அவர் கூறினார். எனவே தடுப்பூசிகள் வருகைக்குபின் தடுப்பூசி முகாம்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கொரோனா தொடர்பான சந்தேக‌ங்களுக்கு 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

From around the web