மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7-ம் தேதி பதவி ஏற்பு விழா..!

 
Governor-Stalin

தமிழகத்தில் ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முறைப்படி அழைப்பு விடுத்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. புதிய ஆட்சியை ஏற்படுத்த முறைப்படி திமுக சட்டமன்ற தலைவரை தேர்வு செய்ய திமுக எம்.எல். ஏ.க்கள் கூட்டத்தை பொதுச் செயலாளர் துரைமுருகன் கூட்டினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற திமுக. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் திமுக சட்டமன்ற தலைவராக மு.க.ஸ்டாலினை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து இன்று (மே 5) காலை கிண்டி ஆளுநர் மாளிகைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்றார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் சென்றனர்.

அங்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, சட்டமன்ற கட்சி தலைவராக எம்.எல்.ஏ.க் களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை அவரிடம் வழங்கினார். இதனைத்தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரினார். இதை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக்கொண்டார்.

முதல்வராக பதவியேற்க இருக்கும் ஸ்டாலினுக்கு,ஆளுநர் தரப்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பதவி ஏற்பு விழாவை எப்படி எளிமையாக நடத்தலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்கும் போதே, அனைத்து அமைச்சர்களும் பதவி ஏற்று கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் பிற்பகலில், மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஆளுநரின் செயலாளர் அனந்தராவ் பட்டேல் சந்தித்தார். அப்போது ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுத்த ஆளுநரின் கடிதத்தை அவர் வழங்கினார்.

இதனிடையே வரும் வெள்ளிக்கிழமை(மே 7) காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெற இருப்பதாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட அழைப்பிதழில் தெரிவித்துள்ளார். பதவி ஏற்பு விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது.

From around the web