திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

 
திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நிலவி வரும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண பல்வேறு உலக நாடுகள் நேசக்கரம் நீட்டி வருகின்றன.

இதற்கிடையில் உள்நாட்டிலேயே ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்கும் முயற்சி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை, மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் திருச்சி பெல் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி பாரத் மிகுமின் நிறுவனத்தில் மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்கூடத்தில் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாதால், 2016 முதல் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பெல் நிறுவனம் 8 மணி நேரத்தில், 1000 கியூபிக் மீட்டர், அதாவது 150 உருளைகள் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது எனவும் வைகோ தெரிவித்துள்ளார். 2016 வரை, திருச்சி பெல் மருத்துவமனையில், இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டு வந்தது என்றும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

From around the web