திருச்சி பெல் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்

 
திருச்சி பெல் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்

திருச்சி பெல் ஆலையில், மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நிலவி வரும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண பல்வேறு உலக நாடுகள் நேசக்கரம் நீட்டி வருகின்றன.

இதற்கிடையில் உள்நாட்டிலேயே ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்கும் முயற்சி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை, மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் கடந்த 2016 ஆண்டு முதல் ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்கூடம், மேலாண்மை பிரச்சனை காரணமாக செயல்படாமல் உள்ளதாகவும், அந்த ஆக்சிஜன் கூடத்தை மீண்டும் செயல்பட வைத்தால் நாள்தோறும் 400 சிலிண்டர் அளவுக்கு ஆக்சிஜனை பெறமுடியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக உள்ள இந்த காலகட்டத்தில், பெல் நிறுவனத்தை மீண்டும் ஆக்சிஜன் தயாரிப்புக்கு பயன்படுத்தினால் மிகுந்த பயனளிக்கும் என்றும் மக்களின் நலன்கருதி திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை மீண்டும் துவங்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இதே கோரிக்கையை முன்வைத்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

From around the web