தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசி.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி

 
MaSubramanian

தமிழ்நாட்டிற்கு மேலும் 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தேவைப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மக்களிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் மிகுந்துள்ளதால், பல இடங்களில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதனால், ஒன்றிய அரசிடம் கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்க மாநில அரசு வலியுறுத்தி வருகிறது.

அதன்படி அவ்வப்போது ஒன்றிய தொகுப்பில் இருந்து வரும் தடுப்பூசிகளை தமிழ்நாடு அரசு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே நேற்று வந்த 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இன்று சென்னை உள்பட பல மாவட்டங்களில் மீண்டும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவையில், தனியார் மருத்துவமனையில் இலவச தடுப்பூசி திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், ‘தமிழ்நாட்டுக்கு மேலும் 10 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. அதுகுறித்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். அரசு சார்பில்,  இலவசமாக போடப்படும் தடுப்பூசிகளையே பொதுமக்கள் அதிகம் விரும்புகின்றனர். அதனால், சிஎஸ்ஐஆர் பங்களிப்புடன் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போட தமிழ்நாடு அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போதைய நிலையில், இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு இருக்காது. தமிழகத்துக்கு இன்று மாலை மேலும் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளது’ என்று தெரிவித்தார்.

From around the web