அதிமுக முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்

 
Pulamaipithan
அதிமுக முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.

அதிமுக முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று காலை புலமைபித்தன் காலமானார். நீலாங்கரையில் உள்ள புலமைப்பித்தன் வீட்டில்  இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த  புலமைபித்தனை, சசிகலா நேற்று நேரில் சென்றுசந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

புலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். 1964-ல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். அவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.1968-ல் எம்.ஜி.ஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்திற்காக எழுதிய நான் யார் நான் யார் என்ற பாட்டிற்காக மிகவும் புகழ் பெற்றார். அதன்பிறகு அடிமைப் பெண் படத்தில் எழுதிய ஆயிரம் நிலவே பாடல் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Pulamaipithan-MGR

புலமைப்பித்தன் கோவை மாவட்டம் பள்ளப்பாளையத்தில் 1935-ம் ஆண்டு பிறந்தார். தந்தை பெயர் கருப்பண்ணன். தாயார் பெயர் தெய்வானை அம்மாள்.

பள்ளி இறுதி வகுப்பில் படித்து முடித்த பிறகு, பஞ்சாலையில் தொழிலாளியாக சேர்ந்தார். வேலை பார்த்துக்கொண்டே பேரூர் தனித்தமிழ் கல்லூரியில் படித்து புலவர் பட்டம் பெற்றார்.

அதன் பிறகு 12 ஆண்டுகள் தமிழாசிரியராக நெல்லை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் வேலை செய்தார். பிறகு எம். ஜி. ஆர். உதவியால், சினிமா படங்களுக்கு பாடல்கள் எழுதும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Pulamaipithan

பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் இருந்தே இவர் திராவிடர் கழகத்தில் ஈடுபாடு கொண்டு இருந்தார். பிறகு எம். ஜி. ஆர். திமுகவில் இருந்து விலகி, அதிமுக தொடங்கியபோது, ஆசிரியர் வேலையை விட்டு விலகி, அதிமுக கட்சியில் சேர்ந்தார்.

அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு, 1978-ம் ஆண்டு, இவர் மேல்-சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இவர் சினிமாவுக்கு பாடல்கள் எழுதியது மட்டும் அல்லாமல், "புரட்சித்தீ", "பாவேந்தர் பிள்ளைத்தமிழ்" ஆகிய கவிதை புத்தகங்களையும், "எது கவிதை" என்ற புத்தகத்தையும் எழுதி இருக்கிறார்.

இவர் எழுதிய "பாவேந்தர் பிள்ளைத்தமிழ்" புத்தகம், சென்னை பல்கலைக்கழக எம். ஏ. வகுப்புக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டு உள்ளது.

From around the web