கலைஞர் கருணாநிதியுடன் சிறுவனாக நிதியமைச்சர் பிடிஆர்! வைரலாகும் புகைப்படம்!!

 
PTR Kalaiganar

முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் தலைமையிலான திமுக அரசில் அனைவராலும் கவனிக்கப்படும் அமைச்சராக உள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். தன்னுடைய தந்தையார் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுடன் கூட 6 ஆண்டுகள் மட்டுமே தொடர்ந்து வசித்ததாகச் கூறியுள்ளார்.

பள்ளி, கல்லூரி விடுதிகளிலும் வெளிநாடுகளிலும் படிப்பு, வேலை என இருந்து விட்ட தியாகராஜன், தந்தையார் முதன் முதலாக அமைச்சராகப் பதவியேற்ற போது கூட நேரில் வர இயலாத அளவுக்கு பணிச்சுமையுடன் இருந்தார்.

5 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் கருணாநிதியிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றும் வகையில் தமிழ்நாட்டுக்குத் திரும்பி மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ ஆனார். திமுக தகவல் தொழில் நுட்ப அணியின் மாநிலச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்றுவருக்கு நிதியமைச்சர் பொறுப்பைக் கொடுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். பம்பரமாகச் சுழன்று மதுரை மாவட்ட கொரோனா பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், நிதித்துறை நடவடிக்கைகள், ஜி.எஸ்.டி கவுன்சிலில் தமிழ்நாட்டு உரிமைகள் என தன்னுடைய உழைப்பைக் கொட்டி வருகிறார்.

இன்று திமுக தலைவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 98 வது பிறந்தநாளின் போது அவருடைய பல்வேறு பழைய புகைப்படங்கள் சமூகத்தளத்தில் பகிர்ந்து வரப்படுகிறது. தன்னுடைய வாழ்த்துப் பதிவில் கலைஞருடனான சில படங்களைப் பகிர்ந்து இருந்தார் நிதியமைச்சர். அதில் ஒன்று தியாகராஜன் சிறுவனாக இருந்த போது கலைஞருடன் சோபாவில் அருகருகே அமர்ந்து இருந்த படமாகும்.

இந்தப் படத்தை திமுகவினர் சமூகத்தளங்களில் பகிர்ந்த, இந்தச் சிறுவன் தான் தற்போதைய நிதியமைச்சர் தியாகராஜன் என குறிப்பிட்டு வருகிறார்கள்.

From around the web