தெரியுமா? குஜராத்திலிருந்து தனி விமானத்தில் சென்னை மருத்துவமனைக்கு வந்த கொரோனா நோயாளி!!

 
தெரியுமா? குஜராத்திலிருந்து தனி விமானத்தில் சென்னை மருத்துவமனைக்கு வந்த கொரோனா நோயாளி!!

குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட வடக்கு மாநிலங்களில் கொரொனா இரண்டாம் அலை உக்கிரம் கொண்டிருக்கும் நிலையில், குஜராத்திலிருந்து கொரோனா தொற்று ஏற்பட்ட தொழிலதிபர் ஒருவர், தனி விமானத்தில் சென்னைக்கு வந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குஜராத் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலையை சமாளிக்க முடியாமல் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. படுக்கை வசதி, ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் சாலை ஒரத்தில் படுத்துக்கிடக்கும் அவல நிலை எல்லாம் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளும் நிரம்பி வழிவதால் விஐபிகளுக்குக் கூட மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் முக்கிய விவிஐபிக்கு நெருக்கமான ஒரு தொழிலதிபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை.

தனியார் விமானத்தில் தொழிலதிபரும் அவருடைய குடும்பத்தினர் நால்வரும் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பழைய விமான நிலையத்தில் வந்து சேர்ந்தார். அங்கே சிறப்பு அனுமதி பெற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனை ஒன்றின் ஆம்புலன்சில் அவர் ஏற்றப்பட்டார். அண்ணா சாலை வழியாக விரைந்து வந்த ஆம்புலன்ஸ் நுங்கம்பாக்கம் மருத்துவமனையில் நின்றது. கொரோனா பாதிக்கப்பட்ட தொழிலதிபருக்கு அங்கே உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொழிலதிபரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை . ஒரு முக்கியமான விவிஐபிக்கு நெருக்கமானவர் இந்த தொழிலதிபர் என்று கூறப்படுகிறது.  குஜராத் மாடலை உயர்த்தியும் 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் வீழ்ந்தோம் என்றும் பாஜகவினர் தமிழ்நாட்டில் பரப்புரை செய்து வரும் நிலையில், குஜராத் தொழிலதிபர் ஒருவருக்கே சென்னையில் தான் சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நிலையில் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு உள்ளது என்பது தமிழ்நாட்டு ஆட்சியாளார்களின் சாதனைகளை பறை சாற்றுவதாக உள்ளது.

From around the web