கொங்கு நாடு எனும் பிரிவினையை விதைக்க வேண்டாம்... தமிழ்நாட்டில் அமைதி பாதிக்கும்... கே.பி.முனுசாமி எச்சரிக்கை

 
KPMunusamy

கொங்கு நாடு என பிரிவினை வந்தால் தமிழ்நாட்டில் அமைதி பாதிக்கும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார்.

ஒன்றிய இணை அமைச்சராக எல்.முருகன் பதவியேற்ற போது ஒன்றிய பாஜக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், கொங்கு நாடு, தமிழ்நாடு என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் கொங்கு நாடு தனி மாநிலத்தை ஒன்றிய பாஜக அரசு உருவாக்கப் போகிறதா? என்ற சர்ச்சை வெடித்தது.

தமிழ்நாடு பாஜக தலைவர்களும் கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்கிற வகையில் கருத்துகளை வெளியிட்டு வந்தனர். கொங்கு நாடு தொடர்பான இலக்கிய ஆதாரங்களை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டிருந்தார்.

கொங்கு நாடு தனி மாநில பிரிவினைக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து அ.தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்து விளக்கினார்.

அப்போது அவர் கூறியதாவது, “பேரறிஞர் அண்ணா அரசியல் கட்சியை உருவாக்கிய போது திராவிட நாடு திராவிடர்க்கே என்ற கொள்கையுடன் இயங்கி வந்தார். நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் அவர் வைத்திருக்கும் பற்றால், அப்படி பட்ட கொள்கையை கைவிட்டார்.

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் தமிழ்நாடு பிரிவதை விரும்பவில்லை. கன்னியாகுமரி முதல் சென்னை வரையில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தமிழ்நாடு, தமிழர்கள் என்கிற உணர்வுடன் உள்ளனர். கொங்கு நாடு என்கிற பிரிவினை விதையை விதைக்கவேண்டாம். அப்படி ஒருவேலை கொங்கு நாடு என பிரிவினை வந்தால் தமிழ்நாட்டில் அமைதி பாதிக்கும்.

இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே பிரச்னைகள் ஏற்படும் பொழுது, மத்திய அரசு நடுநிலைமையோடு செயல்பட்டு உச்சநீதிமன்றம் சென்றால் என்ன தீர்ப்பு வழங்குவார்களோ அதை உணரந்து நடுநிலையோடு செயல்படவேண்டும்.” என்று கூறினார்.

From around the web