மாவட்ட ஆட்சியர் உத்தரவாதம்... உள்ளிருப்பு போராட்டத்தை விலக்கிக்கொண்டார் எம்.பி ஜோதிமணி.!

 
Jothimani

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜோதிமணி எம்.பி இன்று விலக்கிக் கொண்டார்.
 
எம்.பி. நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிக்காக வழங்கப்படும் நிதியை தொகுதியிலுள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்த கூட்டம் கரூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதமாக நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தை நடத்ததுவதற்கு பல முறை வலியுறுத்தியும் இதுவரை கூட்டம் நடத்தப்படவில்லை என குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து ஜோதிமணி எம்.பி யிடம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தரையில் அமர்ந்து மனுவை வாங்கி பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டாத நிலையில், ஜோதிமணி எம்.பி. தரையில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினார்.

இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தரைத்தளத்திற்கு வந்து எம்.பி. ஜோதிமணியிடம் அவருடன் தரையில் அமர்ந்து விளக்கம் தெரிவித்தார். இருப்பினும் ஆட்சியரின் பதிலால் சமாதானமடையாத எம்.பி. ஜோதிமணி போராட்டத்தைக் கைவிட மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்பதற்காக அரவக்குறிச்சிக்கு மாவட்ட ஆட்சியர் புறப்பட்டுச் சென்றார்.

இதனிடையே, ஜோதிமணிக்கு ஆதரவு தெரிவித்து கரூர் நகரத் தலைவர் பெரியசாமி, மெய்ஞானமூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். தனது கோரிக்கையை நிறைவேற்றக் கோரிய ஜோதிமணி, இரவு தனது ஆதரவாளர்களுடன் இரவு உணவருந்தாமலே படுத்து உறங்கி, போராட்டத்தைத் தொடர்ந்தார்.

இன்று 2-வது நாளாக (நவ. 26) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்.பி. ஜோதிமணி தனது ஆதரவாளர்களுடன் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மீண்டும் எம்.பி. ஜோதிமணியிடம் மாவட்டத்தில்  மாற்றுத்திறனாளிகளுக்கான ஏடிஐபி முகாம் நடத்தப்படும் என்று உத்திரவாதம் கொடுக்கப்பட்டத்தை அடுத்து உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும், உள்ளிருப்பு போராட்டத்தில் துணைநின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

From around the web