உங்களுக்குத் தெரியுமா? அடுத்து அமையப் போகும் புதிய ஆட்சியே ரஜினி போட்ட பிச்சை தானாம்!!

 
உங்களுக்குத் தெரியுமா? அடுத்து அமையப் போகும் புதிய ஆட்சியே ரஜினி போட்ட பிச்சை தானாம்!!

கொரோனாவை காரணமாகச் சொல்லி அரசியலுக்கு வருவதை முழுக்குப் போட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். கொரோனா இரண்டாம் அலை உக்கிரமாக இருக்கும் சூழலிலும், ஊரடங்கு உத்தரவிலிருந்து சிறப்பு விலக்குப் பெற்று படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் தீவிரமாக எதிர்த்து வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிடுவார் என்று வரும் தகவல்களை ரஜினி (ரசிகர்கள்) வெறியர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை போலும். ரஜினி அரசியலுக்கு வராத காரணத்தால் தான் மற்றவர்களுக்கு முதலமைச்சர் வாய்ப்பு கிடைப்பதாக சமூகத்தளங்களில் பதிவிட்டு தங்கள் இயலாமையை ஆற்றிக்கொள்கிறார்கள் என்று தெரிகிறது.

ஒரு வாட்ஸ் அப் பதிவில், “வெற்றிக்கு 100க்கு 200 சதவீதம் வாய்ப்புகள் இருந்தும் மக்கள் ஆரோக்கியத்திற்காக வெற்றியை துச்சமென தூக்கியெறிந்த மக்களுக்கான ஒரே தலைவன்.  மே 2ல் யார் வெற்றி பெற்றாலும் அது தலைவர் போட்ட பிச்சையாகத்தான் இருக்கும்,” என்று பதிவிட்டுள்ளனர். இந்தப் பதிவின் ஸ்கிரின் ஷாட்டில்  ரஜினியின் பி.ஆர்.ஆ. ரியாஸ் என்ற பெயரும் உள்ளது. வாட்ஸ் அப்பில் அவருக்கு அனுப்பப் பட்டதா அல்லது அவரிடமிருந்து வந்ததா என்று தெரியவில்லை.

எம்ஜிஆர் ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் என்று சொன்ன ரஜினிகாந்த், கொரோனாவுக்கு முன்னதாகவே நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை, மக்களிடம் இதை கொண்டு செல்லுங்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வியை தவிர்த்து, செய்தியாளர் சந்திப்பை நடத்திய போதே அவர் பின் வாங்கி விட்டார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. பாஜக நிர்வாகியை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து ஒரு மாதத்திற்குள்ளாகவே அரசியலிலிருந்து விலகுகிறேன் என்று சொன்னது நாடகம் என்பது சாமானிய மக்களுக்கே தெரியுமே!

கொரோனா புதுசா டிசம்பர் மாதம் தான் வந்ததா? அரசியல் அறிவிப்பு செய்து விட்டு நேராக அண்ணாத்த படப்பிடிப்புக்கு போனவர், அங்கே கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனைக்குப் போகிறார். வெளியே வந்து கட்சி கிடையாது என்கிறார்.  இப்போ கொரோனா இரண்டாம் அலை உக்கிரமாக இருக்கும் போது சிறப்பு அனுமதி பெற்று அண்ணாத்த படப்பிடிப்பு நடக்கிறது. ஒரு வேளை நம்ம சூப்பர் ஸ்டாருக்கு தொற்று ஏற்பட்டு விட்டால் என்னாவது?

ஆக, வெற்றி வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தே அரசியலிலிருந்து விலகி இருக்கும் ரஜினிகாந்த புதிய முதலமைச்சருக்கு பிச்சை போட்டார் என்பதெல்லாம் அபத்தத்தின் உச்சம். இந்த கொரோனா காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட கருத்துக்களை பகிர்வதைக் காட்டிலும், முதலில் உடல்நலத்தை நன்றாகப் பார்த்துக் கொள்வது ரஜினி (ரசிகர்கள்) வெறியர்களுக்கு நல்லது!!

From around the web