அன்றே சொன்னாரா ரஜினி? இதெல்லாம் சரிதானா ரசிகாஸ்?

 
அன்றே சொன்னாரா ரஜினி? இதெல்லாம் சரிதானா ரசிகாஸ்?
 

கொரோனா இரண்டாம் அலை வரும். என்னை நம்பி வந்தவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. அதனால் நான் அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினி சொன்னதையும், ரஜினிக்கு நற்சான்றிதழ் கொடுத்துள்ள தமிழருவி மணியனின் அறிக்கையையும் சேர்த்து ரஜினி ரசிர்கள், ரஜினியை தெய்வத்திற்கும் மேலாக என்று ஆஹா, ஓஹோ என புகழ்ந்து வருகிறார்கள்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிட்டு இருந்தால், அவர் செல்லுமிடமெல்லாம் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை விட 10 மடங்கு கூட்டம் வந்திருக்கும். அதனால் கொரோனா இன்னும் அதிகமாகப் பரவி இருக்கும் என்பது அவர்களின் வாதம்! சரி, அப்படியே இருக்கட்டும். தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப் படவில்லை என்பது கண்கூடானது. அதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.

உதயநிதி ஸ்டாலினுக்கே கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது. கனிமொழி, ஸ்டாலின் என திமுகவினரின் பிரச்சாரத்தில் அதிமுக - பாஜக அணியை விடவும் கூட்டம் அதிகம் என்பது தான் உண்மையும் கூட. கமல் ஹாசன், சீமான், டி.டி.வி தினகரனுக்கும் கூட்டம் கூடத்தான் செய்தது.

சரி, ரஜினி வந்திருந்தால் இன்னும் அதிகம் கூட்டம் வந்திருக்கும் என்பதையும் ஏற்றுக் கொள்வோம். அதான் ரஜினி ரசிகர்கள் எல்லாம் கடமை தவறாத  காவலர்கள் ஆச்சே! அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க மாட்டார்களா? அவர்களுடைய தலைவர் சொல்லும் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை எடுக்க மாட்டார்களா? பொதுமக்களுக்கு வரிசையாக சமூக இடைவெளி கொடுத்து உணவுப் பொருட்கள் வழங்கியவர்கள் தானே இந்த காவலர்கள். ரஜினியின் கூட்டத்தில் அதைக் கடைப்பிடித்திருக்க முடியாதா?

எங்கள் தலைவர் ஒரு நாள் தொலைக்காட்சியில் வந்து பிரச்சாரம் செய்தாலே போதும் என்று சவால் விட்டவர்கள்  தானே! ரஜினி தொலைக்காட்சி, சமூக ஊடகங்களை நம்பி அரசியல் களம் இறங்கியிருக்கலாமே. உரிய வழக்கறிஞர்களை வைத்து வழக்குப் போட்டு ஆன்லைன் பிரச்சாரம் மட்டுமே என்று தேர்தல் ஆணையத்தையே கூட அறிவுறுத்தவும் செய்திருக்கலாமே. இவருக்கு அத்தனை செல்வாக்கு என்றால் ஆன்லைன் பிரச்சாரம் மூலம் மட்டுமே வெற்றியைப் பெற முடியும் தானே! அமெரிக்காவில்  மருத்துவமனையில் படுத்துக் கொண்டே ஜெயிக்கவில்லையா எம்.ஜி.ஆர்!

தேர்தலில் போட்டியிட்டால் டெப்பாசிட் கூட கிடைக்காது. ஒட்டு மொத்த செல்வாக்கும் ஒரே தேர்தலில் காணாமல் போய்விடும் என்பதை நன்றாக உணர்ந்து தான் அரசியலில் இருந்து விலகினார் ரஜினிகாந்த். அவர் எதிர்பார்த்த தேர்தல் 2018ம் ஆண்டு வராமல் போய்விட்டதாலும் 2019ல் மு.க.ஸ்டாலின் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாலும், எடப்பாடி பழனிசாமி ஆணி அடித்து முதலமைச்சர் சீட்டில் உட்கார்ந்து தன்னை ஸ்டாலினுக்கு எதிரான தலைவராக உருவாக்கிக் கொண்டதாலும் இனி இங்கே தனக்கு இடமில்லை என்று தெரிந்தே அரசியல் விலகலுக்கான காய் நகர்த்தினார் ரஜினிகாந்த்.

கொரோனாவுக்கு முன்னதாகவே லீலா பேலஸ் பேட்டியிலேயே ( செய்தியாளர்களின் கேள்வி இல்லாமலேயே) அவருடைய அரசியல் விலகல் முடிவு தெரிந்து விட்டது. கொரோனாவுக்கு நன்றி சொல்லும் ஒரே மனிதர் ரஜினியாகத் தான் இருக்கக்கூடும். கொடும் நோய் வந்து அவருடைய அரசியல் விலகலுக்கு வழி கொடுத்து விட்டது. எனக்குத் தெரியும் தூத்துக்குடியில் சமூக விரோதிகள் புகுந்து விட்டனர் என்று ஆணித்தரமா சொன்னதையை, போற போக்குலே சொல்லிட்டேனுங்கன்னு  பல்டி அடிச்சிவரு தானே நம்ம தலைவர்!

தேர்தல் பரப்புரை ஏப்ரல் 4ம் தேதி முடிவடைந்து விட்டது. 6ம் தேதி வாக்குப்பதிவும் நிறைவடைந்து விட்டது. இந்திய அளவில் கொரோனா தாக்கத்தில் தமிழ்நாடு இன்னும் மோசமாகப் போகவில்லை. தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாகத் தான் உள்ளது. ஆனால் இதே காலக்கட்டத்தில் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் கொரோனா உக்கிரம் அடைந்துள்ளது. 14 நாட்கள் லாக்டவுண் அறிவிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்ட்ராவிலும், டெல்லியிலும், குஜராத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் தான் கொரோனா உக்கிரத்துடன் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அங்கெல்லாம் எந்தத் தேர்தலும் இல்லையே சாமிகளா?

ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடிக்கும் பேரிடரில் ஒரு உயிர் போனாலும் அது பேரிழப்பு தான். இந்த நேரத்தில் சக மனிதர்களுக்கு உதவியாக இருப்பது தான் மனித நேயம். அன்றே சொன்னார் ரஜினி என்று பொருந்தாத லாஜிக்குடன் அவரை கடவுளாக்கும் செயல் மன்னிக்கமுடியாத குற்றமாகும்.

- மணி

From around the web