தமிழ்நாட்டில் ஜூலை 19-ம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு!!

 
Lockdown

தமிழ்நாட்டில் ஜூலை 19-ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 12-ந் தேதியுடன் முடிகிறது. அதன்படி, 5-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

கொரோனா நோய்த் தொற்று பரவலைக் குறைக்கத் தேவையான கட்டுப்பாடுகளை 31-7-2021 வரை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

தடை

  • மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)
  • ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து
  • திரையரங்குகள்
  • அனைத்து மதுக்கூடங்கள்
  • நீச்சல் குளங்கள்
  • பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்
  • பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்
  • பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
  • உயிரியல் பூங்காக்கள்
  • நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
  • இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். மேலும், ஏற்கனவே இரவு 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் 12-7-2021 முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

கூடுதல் அனுமதி

மேலும், பின்வரும் கூடுதல் செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகின்றன.

  • புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படுகிறது.
  • ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த விபரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கவேண்டும்.
  • உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள், நடைபாதைக் கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள்  ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்குட்பட்டு 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

பொது

  • அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
  • கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள்  கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
  • கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
  • குளிர் சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.  
  • கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

 வழிமுறைகள்

  • நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
  • கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட  ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
  • வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், கீழ்க்கண்ட நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
  • நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர,  இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.
  • நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், நோய்த் தொற்று பரவலை கண்காணிக்க, குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாக தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்.
  • அனுமதிக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தொடர்புடைய துறைகள்  கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
  • கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா நோய்த் தொற்று மேலாண்மைக்கான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கைகள் தொடரும்.

மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு அளித்த ஒத்துழைப்பின் காரணமாகவே நோய்த்தொற்று குறைந்து வந்துள்ளது என்பதை மனதில் கொண்டு தொடர்ந்து அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

From around the web