வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி!! ஒரு பெண் சிங்கம் உயிரிழப்பு

 
Zoo

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான உயிரியல் பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு மான், குரங்கு, சிங்கம், புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா 2-ம் அலை காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டு, பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும் சிங்கங்களில் நீலா என்ற சிங்கம் திடீரென சளி மற்றும் பசியின்மை தொல்லை ஏற்பட்டு நேற்று உயிரிழந்துள்ளது. இதனையடுத்து அங்குள்ள 11 சிங்கங்களின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. அதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து சிங்கங்களைத் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு முன் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web