திமுக ஆட்சியையே நாம் தமிழர் கட்சிதான் வழிநடத்திக் கொண்டிருக்கின்றது - சீமான் பேச்சால் சர்ச்சை

 
Seeman

திமுக ஆட்சியையே நாம் தமிழர் கட்சிதான் வழிநடத்திக் கொண்டிருக்கின்றது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

மகாகவி பாரதியார் மற்றும் இமானுவேல் சேகர் ஆகியோர் நினைவு தினத்தையொட்டி, தனது இல்லத்தின் முன்பு அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “திமுக ஆட்சியையே நாம் தமிழர் கட்சிதான் வழிநடத்திக்கொண்டு போகிறது என்ற பெருமை எனக்கு வந்திருக்கிறது. நாம் தமிழர் கட்சி என்ன சொல்லியிருக்கிறதோ, என்ன எழுதி அறிக்கை விடுக்கிறதோ அதையெல்லாம் பார்த்துதான் திமுக அரசு செயல்படுத்துகிறது.

நான் பேசுவதற்கு எதையும் மிச்சம் வைத்துவிடக்கூடாது என்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன; அதில் எனக்கு மகிழ்ச்சிதான். நான் திமுகவில் தொடர்ந்து இருந்திருந்தால் அமைச்சராக கூட இப்போது ஆகியிருப்பேன். பிரபாகரனை சந்தித்த பிறகுதான் எனக்குள் ஒரு வெளிச்சம் பாய்ந்தது; அதுதான் ‘தமிழ் தேசியம்’.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுவிக்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை. அப்படியிருக்கும்போது புதிதாக வரும் ஆளுநர் ரவி ஒன்றும் செய்யமாட்டார். ஆளுநரின் வேலை என்பது மாநிலங்களில் நடப்பதை உளவு பார்த்து ஒன்றிய அரசுக்கு சொல்வது; தமிழ்நாட்டுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர் அந்த வேலையை சரியாக செய்வார் என்று நினைக்கிறேன்.

பெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு மரணத்தை தவிர வேறு தண்டனையே கிடையாது” என்று கூறினார்.
மேலும், நடிகர் வடிவேலு தொடர்பான பிரச்னையை தீர்த்து வைத்தது முதல்வர் இல்லை என்றும், தானே பிரச்னையை பேசி தீர்த்து வைத்ததாகவும் கூறினார்.

கோடநாடு வழக்கு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பதற்றத்துடனே பேசுகிறாரே என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, சம்பந்தப்பட்டவருக்கு பதற்றம் வராமல் இருந்தால் எப்படி என்று பதிலளித்தார்.

From around the web