அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு கண்டனம்: போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்..!

 
Transport-Workers-strike

அமைச்சர் துரைமுருகன் பேச்சைக் கண்டித்து தஞ்சாவூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில், டிரைவர்கள் மற்றும் நடத்துநர்கள் இன்று காலை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் செய்யும் பெண்களை நடத்துநர்கள் தரக்குறைவாகப் பேசினால் அவர்களை தாக்குங்கள்; அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாக கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து, தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக நகரப் பணிமனையில் இன்று (அக். 1) காலை 5 மணி முதல், டிரைவர்கள் மற்றும் நடத்துநர்கள் பேருந்துகளை இயக்காமல் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தொமுச உட்பட அனைத்து தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றனர்.

தகவலறிந்த போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் செந்தில்குமார், கிளை மேலாளர்கள் ராஜசேகரன், திருஞானம் உள்ளிட்டோர் பணிமனைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள் மற்றும் நடத்துநர்களை சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து, காலை 7.15 மணியளவில் டிரைவர்களும் நடத்துநர்களும் பேருந்துகளை இயக்கத் தொடங்கினார். சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

From around the web