போலீசை மிரட்டிய பெண் வழக்கறிஞர் மீது பார் கவுன்சிலில் புகார்... நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறை கடிதம்

 
Chennai

காவலர்களுடன் வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பார் கவுன்சிலுக்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

தமிழ்நாட்டில் ஊரடங்கு விதிகளை மீறி தேவையின்றி வெளியே செல்வோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி சென்னை சேத்துப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல்துறையினரிடம், பெண் வழக்கறிஞர் தனுஜா, பயிற்சி வழக்கறிஞராக இருக்கும் தனது மகளுக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த சம்பவம் குறித்து சேத்துப்பட்டு காவல்துறை சார்பாக பெண் வழக்கறிஞர் தனுஜா மற்றும் அவரது மகள் ப்ரீத்தி ஆகிய இருவர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் வழக்கறிஞர் தனுஜா தன் மீது போடப்பட்டிருந்த வழக்குகளுக்கு எதிராக முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், தனுஜா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை காவல்துறை சார்பில் பார் கவுன்சிலுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் வழக்கறிஞர் தனுஜா மற்றும் அவரது மகளான பயிற்சி வழக்கறிஞர் ப்ரீத்தி ஆகிய இருவரின் விவரங்களையும் குறிப்பிட்டு, இது போன்ற செயல்களில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது என்றும் காவலர்கள் தங்கள் கடமையை செய்வதற்கு வழக்கறிஞர்கள் உதவியாக இருக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு இடையூறு செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே வழக்கறிஞர் தனுஜா மீது பார் கவுன்சில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார் கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே ஒருவரை வழக்கறிஞராக அங்கீகரிக்கவும், வழக்காடுவதற்கான உரிமையை வழங்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web