சமூகத்தளத்தில் புகார்.. நடவடிக்கை எடுத்த பிடிஆர், ஆட்சியர்! 66 ஆயிரம் ரூபாய் திருப்பிக் கொடுத்த தனியார் மருத்துவமனை!!

 
PTR

மதுரையில்  கூடுதல் கட்டணம் வசூலித்ததாக தனியார் மருத்துவமனை ரசீதை சமூகத்தளத்தில் வெளியிட்டிருந்தவருக்கு நிதியமைச்சர் தியாகராஜன் மற்றும் மதுரை ஆட்சியர் நிவாரணம் பெற்றுத் தந்துள்ளனர்.

மதுரை சின்னச்சொக்கிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மே மாதம் 13ம் தேதி அதிகாலையில் அனுமதிக்கப்பட்டு 14ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நோயாளிக்கு 1 லட்சத்து 356 ரூபாய் செலுத்த வேண்டும் என்று பில் கொடுத்துள்ளனர் என்று ட்விட்டரில் சோனியா அருண்குமார் என்பவர் ரசீதை இணைத்து வெளியிட்டு இருந்தார்.

மே29ம் தேதி வெளியான இந்த ட்வீட்டை, அதே நாளில் ரீட்வீட் செய்த நிதியமைச்சர் தியாகராஜன், இது குறித்து மதுரை ஆட்சியருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளதாக தெரிவித்து இருந்தார். மதுரை ஆட்சியர் அனிஷ் சேகர் இது குறித்து விசாரணை நடத்தியுள்ளார். மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே 46 ஆயிரம் ரூபாயை திருப்பிச் செலுத்தியுள்ள நிலையில், ஆட்சியரின் நடவடிக்கையால் கூடுதலாக 20 ஆயிரம் ரூபாயைத் திருப்பிச் செலுத்தியுள்ளனர். முதலில் வசூலிக்கப்பட்ட ஒரு லட்சத்து 356 ரூபாய் தொகையில் 66 ஆயிரம் குறைக்கப்பட்டு, கடைசியில் 34 ஆயிரத்து 356 ரூபாயாக ஆகியுள்ளது,

அரசு நிர்ணயித்துள்ள தொகையை விட கூடுதலாக வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தனியார் மருத்துவமனை நிர்வாகிகளை அழைத்து, முதலமைச்சர் அறிவித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை சொல்வோம் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.


சமூகத்தளத்தில் முறையிட்டதால் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் கிடைக்கச் செய்த நிதியமைச்சருக்கு ட்விட்டரில் பாராட்டுக்கள் குவிகிறது.


 

From around the web