ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

 
CM-Stalin

ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மனைவி ஜெயலெட்சுமி. 23 வயதே ஆன நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சை அழைத்துள்ளனர். அங்கு உடனடியாக வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயலெட்சுமி மற்றும் அவரது மாமியார் மற்றும் அவரது நாத்தனார் என மூவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.

ஆம்புலன்சை ஓட்டிவந்த டிரைவர் கலியமூர்த்தி மற்றும் மருத்துவ உதவியாளர் மீனா ஆகியோரும் ஆம்புலன்சில் பயணம் செய்து வந்துள்ளனர். இதற்கிடையே, கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆலத்தூர் ஏரிக்கரை அருகே வந்த போது ஆம்புலன்ஸ் டயர் வெடித்ததில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தின் மீது அதிவேகமாக மோதியது.

இதில் நிறைமாத கர்ப்பிணியான ஜெயலெட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த எஞ்சிய 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே ஜெயலெட்சுமியின் மாமியார் செல்வி மற்றும் நாத்தனார் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஆம்புலன்ஸ் டிரைவர் கலியமூர்த்தி மற்றும் மருத்துவ உதவியாளர் மீனா ஆகிய இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் மற்றும் உயிரிழந்த உறவினர்கள் செல்வி, அம்பிகா ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பந்தப்படவர்களுக்கு சேர வேண்டிய தொகையையும் விரைவில் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

From around the web