நகைகளை அடகு வைத்து... கொரோனா நோயாளிகளுக்கு 100 மின்விசிறிகளை வழங்கிய கோவை தம்பதி!!

 
நகைகளை அடகு வைத்து... கொரோனா நோயாளிகளுக்கு 100 மின்விசிறிகளை வழங்கிய கோவை தம்பதி!!

கோவையில், இளம் தம்பதி கொரோனா நோயாளிகளுக்காக தாங்கள் நகைகளை அடமானம் வைத்து மின்விசிறிகள் வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை, கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு 600-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குளிர்சாதன வசதி கொண்ட மருத்துவமனை என்பதால் இங்கு மின்விசிறிகள் இல்லை.

கொரோனா காலத்தில் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தக் கூடாது என்பதால் கோடை காலத்தில் நோயாளிகள் சிரமப்படாமல் இருக்க அரசு சார்பில் 300 மின்விசிறிகள் வழங்கப்பட்டன. எஞ்சியுள்ள படுக்கைகளுக்கும் மின்விசிறிகள் தேவைப்பட்டதால், தன்னார்வலர்கள் மின்விசிறிகளை வழங்கலாம் எனவும், கரோனா காலம் முடிந்தவுடன் அவர்கள் விரும்பினால் மின்விசிறிகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையறிந்த கோவை ராம் நகரில் வசித்து வரும் இளம் தம்பதியினர், நேற்று காலை 11 மணியளவில் சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்றனர். பின்னர், மருத்துவமனை முதல்வர் ரவீந்திரனை சந்தித்து, கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக மின்விசிறிகள் வழங்கவுள்ளதாக கூறியுள்ளனர்.

மின்விசிறிகளை பெற வந்த முதல்வருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு டெம்போ முழுவதும் மின்விசிறிகள் இருந்ததை பார்த்து டீன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தம்பதியிடம் கேட்ட போது, இருவரும் தாங்கள் அணிந்திருந்த தங்க நகைகளை அடமானம் வைத்து 2.5 லட்சம் ரூபாய்க்கு 100 மின்விசிறிகள் வாங்கி வந்திருப்பது தெரியவந்தது.

இதனால், வருத்தமடைந்த டீன், மிகவும் சிரமப்பட்டு இவ்வளவு மின்விசிறிகள் வழங்க வேண்டாம். பாதி மின்விசிறிகளை திரும்பக் கொடுத்து உங்களுடைய நகையை மீட்டு கொள்ளுங்கள் என்று டீன் தெரிவித்துள்ளார். அப்போது இருவரும் இந்த மின்விசிறிகள் கொரோனா நோயாளிகளுக்காக வாங்கி வரப்பட்டது , எனவே அவர்கள் பயன்பாட்டுக்கே இது பயன்படுத்த வேண்டுமென்று உறுதியாக கூறிவிட்டனர்.

இதனையடுத்து மருத்துவமனை டீன் ரவீந்திரன், கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இவ்வளவு மின்விசிறிகளை சிரமத்துக்கு இடையே தரவேண்டாம் என்று ஆட்சியரும் கூறியிருக்கிறார். இதனை அந்த தம்பதியிடம் முதல்வர் தெரிவித்தும், தாங்கள் கொண்டு வந்த மின்விசிறிகளை திரும்ப எடுத்துச் செல்ல மாட்டோம் என்று உறுதியாக கூறிவிட்டனர். எங்கள் சக்திக்குட்பட்டு இதை செய்வதாகவும் தம்பதி கூறியுள்ளனர்.

தொடர்ந்து, தம்பதி கொண்டு அனைத்து மின் விசிறிகளையும் பெற்றுக்கொண்ட மருத்துவமனை டீன் ரவீந்திரன், இருவருக்கும் நன்றி தெரிவித்தார். கொரோனா நோயாளிகளுக்காக அணிந்திருந்த நகைகளை அடமானம் வைத்து மின்விசிறிகள் வழங்கிய சம்பவம் கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தம்பதி மின்விசிறிகள் வழங்கியதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய பெயர் விபரம் ஏதும் வெளியே தெரியக்கூடாது என அன்புக் கட்டளையிட்டு சென்றுள்ளனர்.

From around the web