க்ளீன் ஸ்வீப்... மொத்தமாக சென்னையை கைப்பற்றும் திமுக..? 16 தொகுதியிலும் முன்னிலை.. அதிமுக அதிர்ச்சி!!

 
க்ளீன் ஸ்வீப்... மொத்தமாக சென்னையை கைப்பற்றும் திமுக..? 16 தொகுதியிலும் முன்னிலை.. அதிமுக அதிர்ச்சி!!

சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த சுற்றுகளில் திமுகதான் முன்னிலை வகித்து வருகிறது. அதே சமயம் அதிமுக எதிர்பார்த்ததை விட பல தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

138 இடங்களில் இதுவரை திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணி 95 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

இதில் சென்னையில் மொத்தமாக திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள்தான் முன்னிலை வகித்து வருகிறார்கள். சென்னையில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் சென்னையில் அதிக இடங்களில் திமுகதான் வென்றது.

இந்த முறை மொத்தமாக 16 தொகுதிகளில் திமுக கூட்டணிதான் முன்னிலை வகிக்கிறது. சென்னையில் உள்ள அண்ணா நகர், சேப்பாக்கம் , ஆர். கே நகர், எக்மோர், துறைமுகம், கொளத்தூர், மைலாப்பூரில் திமுக கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்து வருகிறது.

அதேபோல் பெரம்பூர், ராயபுரம், சைதாப்பேட்டை, திருவிக நகர், ஆயிரம் விளக்கு, தி நகர், வேளச்சேரி, வில்லிவாக்கம், விருகம்பாக்கம் தொகுதிகளிலும் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இதனால் திமுக சென்னையை க்ளீன் ஸ்வீப் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

முக்கியமாக சென்னையில் போட்டியிடும் ஸ்டார் வேட்பாளர்கள் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், டாக்டர் எழிலன் என்று முக்கிய வேட்பாளர்கள் எல்லோரும் முன்னிலையில் இருக்கிறார்கள். அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். அதே சமயம் இது தொடக்க கட்ட நிலவரம்தான் என்பதால் போக போக சென்னையில் அதிமுக முன்னிலை பெறுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

From around the web