12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாம்... அதிமுக, திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஆதரவு!!

 
TN-Govt

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தநிலையில், தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என பல கட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலானோர் தேர்வை நடத்தலாம் என கருத்து கூறியிருந்த நிலையில், அடுத்தகட்டமாக சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த ஆலோசனையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த தங்களது கட்சியின் நிலைப்பாட்டை கூறினர்.

இந்த ஆலோசனையில் திமுக, காங்கிரஸ், மதிமுக, வி.சி.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகிய பெரும்பான்மையான கட்சிகள் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளன. பாஜக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், புரட்சி பாரதம் ஆகிய 5 கட்சிகள் தேர்வு நடத்த வேண்டாம் என கூறியுள்ளன. பெரும்பான்மை கட்சிகளின் நிலைப்பாட்டை ஏற்பதாக அதிமுகவும் அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, மருத்துவ வல்லுநர் குழுவுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து முதல்வரிடம் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அனைத்து கருத்துக்களும் எழுத்துப்பூர்வமாக தொகுக்கப்பட்டு அறிக்கையாக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார். அந்த கருத்துக்களை பரிசீலித்து முதல்வர் இறுதி முடிவெடுப்பார் எனவும் அன்பில் மகேஷ் கூறினார்.

From around the web