கல்லணையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு... தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார்!!

 
CM-Stalin

கல்லணை கால்வாய் சீரமைப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று காலை 9.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து கார் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு கல்லணை கால்வாய் நவீனப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் கே.என்.நேரு, நிர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 647 இடங்களில் ரூ.64 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குடிமராமத்து பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்த முதல்வரிடம், அந்த பணிகளின் நிலவரம் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் விளக்கமளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து குடிமராமத்து பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இதனை தொடர்ந்து சேலம் மேட்டூர் அணையில் நாளை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், இன்று சுற்றுலா மாளிகையில் மதிய உணவு அருந்தி விட்டு சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் சிறப்பு விமானம் மூலம் சேலத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

From around the web