நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்!!

 
CM-Stalin

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறும் சட்ட மசோதாவை பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது.

இந்நிலையில், நீட் தேர்வின் பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கை அடிப்படையில் பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசியது,

நீட் நுழைவுத் தேர்வை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.

12-ம் வகுப்பு தேர்வு முடிவின் அடிப்படையில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் சிறந்த மருத்துவர்களாகினர். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தினால் கல்வித் தரம் குறையாது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு தொடரும் வகையில் மசோதா அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற தீர்மானிக்கப்பட்டுள்ள மசோதாவை அனைத்துக் கட்சியும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் எனத் தெரிவித்தார்.

From around the web