சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!!

 
MKS

வண்டலூர் பூங்காவில் தற்போது 8 சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தினார்.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், 11 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், உடல்நலக்குறைவால் 9 வயது பெண் சிங்கம் உயிரிழந்தது. இதனால் மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று வனத்துறை உயர் அதிகாரிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆய்வு நடத்தினர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், பூங்கா மருத்துவர்கள், தலைமை வன பாதுகாப்பு அதிகாரி யுவராஜ் ஆகியோர் விலங்குகளை பரிசோதித்தனர்.

அப்போது பூங்காவில் இருக்கும் சிறுத்தை, புலி உள்பட விலங்குகள் அனைத்திற்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அனைத்து விலங்குகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்துகளும், வைட்டமின் மாத்திரைகளும் வழங்கப்பட்டன. பூங்கா ஊழியர்கள் முழு கவச உடை அணிந்த பிறகே பூங்காவிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வண்டலூர் பூங்காவில் தற்போது 8 சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அங்கு ஆய்வு நடத்தினார். அப்போது கொரோனா பாதித்த சிங்கங்களுக்கு சிகிச்சை வழங்குவது மற்றும் பிற உயிரினங்களை தனிமைப்படுத்துதல் குறித்த பணிகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

From around the web