ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு

 
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஆலோசிக்க நாளை அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2-ம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசமாகிக் கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த சூழலில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சையில் முக்கியப்பங்காற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு தாக்கல் செய்தது.

அந்த மனு இரு தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தரப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக, பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டதையடுத்து வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் இடைக்கால மனு நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பாப்டே, ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஏன் ஆக்சிஜன் தயாரிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்தினாலும் எங்களுக்கு கவலையில்லை. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்த அதிகாரம் உள்ளது. 1 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூட மிகவும் முக்கியம் என நீதிபதி தெரிவித்தார்.

மேலும், ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான விரிவான பிரமான பத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ( ஏப்ரல் 26) ஒத்திவைத்தது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஆலோசிக்க நாளை அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். நாளை காலை 9:15 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையின்போது தமிழகம் சார்பில் முன் வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து ஆலோசிக்க நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

From around the web