செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையம் என்ன லாரி மெக்கானிக் ஷெட்டா..? பாஜக மாநில தலைவர் முருகன்

 
LMurugan

உடனே உற்பத்தியை தொடங்குவதற்கு செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையம் லாரி மெக்கானிக் கடை இல்லை என தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கூறினார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரின் புகைப்படத்திற்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பிரதமர் மோடி தலைமையில் கடந்த 7 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சியை சந்தித்துள்ளது. கொரோனா முதல் அலையின் தாக்கத்தை சிறப்பான முறையில் மத்திய அரசு கையாண்டு கட்டுப்படுத்தியது.

தமிழகத்திற்கு போதிய அளவில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 20 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டது. இதேபோல் இந்த மாதத்திற்கு இரட்டிப்பாக வழங்கப்படும். ஓரிரு நாட்களில் மேலும் ஒரு லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்தை வந்தடையும். தடுப்பூசி வழங்குவது மாநிலத்தின் மக்கள் தொகை, அங்கு உள்ள பாதிப்பு சதவீதம், கொரோனா தடுப்பூசி பயன்படுத்தும் விதம் ஆகியவற்றை கணக்கில் கொண்டே வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தடுப்பூசிகள் அதிக அளவு வீணாக்கப்படுகிறது.

உடனே உற்பத்தியை தொடங்குவதற்கு, செங்கல்பட்டு தடுப்பூசி மையம் ஒன்றும் லாரி மெக்கானிக் கடை கிடையாது. அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த அதை, ஆய்வு செய்து சரியான நேரத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கும். தேவைப்பட்டால் மத்திய அரசு ஏற்று நடத்த வாய்ப்பு இருக்கிறது. சசிகலா ஆடியோ விவகாரம் அதிமுகவின் உட்கட்சி விவகாரம். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

From around the web