டெல்டா மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

 
Rain-Report

அடுத்த இரண்டு நாட்களுக்கு டெல்டா உட்பட சில மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, இன்று புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தெற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும் நாளை, நாளை மறுநாள் தமிழக கடலோர பகுதிகள், குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

From around the web