‘புளியில் பல்லி’ என சுட்டிக்காட்டியவர் மீது வழக்கு.. புகாரை கண்டித்து தீக்குளித்த முதியவரின் மகன் உயிரிழப்பு

 
Kuppusamy

தந்தை மீது பொய்யான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனக்கூறி குப்புசாமி மன வருத்தத்தில் தீக்க்குளித்ததாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் இருந்த புளியில் பல்லி இருப்பதாக தகவல் வெளியானது. அந்த அவதூறு தகவலை பரப்பியதாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரம் சரவணப்பொய்கை திருக்குளம் அருகே வசித்து வரும் நந்தன் (வயது 65) என்பவர் மீது அந்த பகுதியை சேர்ந்த ரேஷன் கடை விற்பனையாளர் சரவணன் திருத்தணி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து நந்தன் தனது மகன்களிடம் கூறி வருத்தப்பட்டார். இதனால் மனமுடைந்த நந்தனின் மூத்த மகனும் தனியார் நிறுவன ஊழியருமான குப்புசாமி (வயது 36), தனது தந்தை மீது பொய்யான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்களை விசாரணைக்கு அழைப்பார்களே என்று புலம்பி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவருத்தத்தில் இருந்த குப்புசாமி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அதிமுகவினர் திருத்தணி அரசு மருத்துவமனை முன்பு குவிந்து தமிழ்நாடு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதற்கிடையே, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குப்புசாமி, சிகிச்சை பலனளிக்காமல்  இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web