ஜிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணிகளுக்கு சிறிய தலைகளுடன் குழந்தைகள் பிறக்குமா..?

 
MaSubramanian

ஜிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணிகளுக்கு சிறிய தலைகளுடன் குழந்தைகள் பிறக்கும் நிலை காணப்படுகிறது என அமைச்சர் கூறியது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் முதன்முறையாக கேரளாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.  தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் சமீப காலங்களாக ஜிகா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொசுக்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுவதால் அங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

தமிழ்நாட்டிலும் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால் கேரள, தமிழ்நாடு எல்லையில் பரிசோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கோவை மக்களுக்கு ஜிகா வைரஸ் பரவல் குறித்தும் கொசுக்கள் மூலம் வைரஸ் பரவுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், டெல்டா, டெல்டா பிளஸ், ஜிகா என புது வைரஸ்கள் உருவாகின்றன. ஜிகா வைரசால் பாதிக்கப்படும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சிறிய தலையுடன் பிறக்கும் நிலை உள்ளது. இதனால் எல்லை பகுதியில் பரிசோதனை செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஏடிஸ் கொசுக்கள் மூலமாக வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் ஜிகா பாதிப்பு இல்லை என்றும் எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் நடைபெறுகிறது என்றும் இதுவரை 2,500 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web