முகக்கவசம் போட முகம் சுழிக்கலாமா?

 
Mask

முகச்சவரம் செய்ய ஒரு பிளேடை வாங்கி வந்து வேலையை முடித்த பின் அதை தூக்கி எறிய மனம் வருவதில்லை. அதை இரண்டாக உடைத்து பல்வேறு பணிகளுக்கு பின் அதை அது அழும் வரை விடாமல்  பயன்படுத்தி பின்னர் அப்புறப்படுத்துவதை நீண்ட நாளாய் பெரும்பாலும் அனைவரும் செய்துவருகிறோம். குறிப்பாக நாம் பயன்படுத்திய அந்த பிளேடை காகிதம் நறுக்குவது,பென்சில் சீவுவது,நகம் நறுக்குவது,நூலை அறுப்பது,இதையும் தாண்டி சில குற்றவாளிகள் அதை வைத்து பிக்பாக்கெட் அடிப்பது வரை அதன் மறுபயன்பாடு அதன் ஆயுள் கடந்து நீட்டிக்கப்படுகிறது. 

இதுபோல் காலியான தண்ணீர் கேனில் இசை வாசிப்பது, உட்காரும் பெஞ்சில் தாளம் போடுவது,குடிதண்ணீர் பாட்டிலில் டீசல் வாங்குவது,தீர்த்தம் பிடிப்பது,மழை வரும்போது ஞெகிழி பைகளை தலைக்கவசம் ஆக்குவது என ஒரு பொருளை வழக்கத்திற்கு மாறாக அது எந்த பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டதோ அதை தம்முடைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு சிக்கனமாக மாற்றி கொள்வதை மனிதன் ஆதியிலிருந்தே செய்கிறான். இப்படி மாற்றும்பொழது புதிய பொருளை கண்டுபிடிப்பதற்கான அறிவையும் அவன் பெறுகிறான். பழைய பொருளை காப்பி அடித்து பெயர் வாங்கும் பெருமையும் அடைகிறான். ஆனால் சிலவற்றில் உள்ள அபாயத்தை அவன் அறிவதேயில்லை.

நாம் அவனை கஞ்சத்தனம் பிடித்தவன்,சிக்கனமானவன் எனச்சொல்லி பல பட்டங்கள் கட்டினாலும் மறுபயன்பாட்டில் இந்தியர்களை அடித்துக்கொள்ள வேறு யாரும் கிடையாது. இதுபோன்று உருவாகும் பொருளை அல்லது மாற்றிக்கொள்ளும் பொருளை இந்தியில் ஜுகாட் என்று அழைப்பார்கள். உடைந்த காரை வீடாக்கி கொள்வதில் இருந்து பனை நுங்கில் உருளை செய்து விளையாடுவது வரை எல்லாமே ஜுகாட்தான். 

ஆனால் இந்த கொரோனா பாதிப்பில் மக்கள் தமக்கு வேண்டியவாறு அவரவர்க்கு ஒரு முகக்கவசம் தயாரித்து போட்டுக்கொள்வது பார்க்க அழகாக இருந்தாலும் அது உண்மையாக அதன் வேலையை செய்யுமா என்பது சந்தேகம்தான்.முந்தானையை எடுத்து வாயை மூடிக்கொள்வது,கைக்குட்டையால் மூக்கை மூடிக்கொள்வதும் எந்த வகையில் அவர்களை பாதுகாக்கும் என்பது நமக்கு புரியவில்லை. பொருளாதர பற்றாக்குறையில் நமக்கு நாமே அதை செய்தாலும்,அதை எவ்வாறு சுத்தப்படுத்தி மறுபடியும் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது கேள்விக்குறிதான். 

ஏனென்றால் முகக்கவசங்கள் குறைந்தது நான்கைந்து மணி நேரம் வேலை செய்வதாகவே தகவல். நம்மில் எத்தனை பேர் இப்படி பயன்படுத்திய முகக்கவசங்களை பொறுமையோடு தினசரி சுத்தமாக வைத்துக்கொள்ள போகிறோம் என்பதும் கடினமான செய்திதான்.மருத்துவர்கள் எவ்வளவு ஆலோசனைகளை சொன்னாலும் ஜூகாட் மனநிலை என்றும் நம்மை விட்டு அகலாததின் காரணமே இந்த நிலைப்பாடு. அதுமட்டுமல்லாமல் அலட்சியமும்,பொருளாதார சூழ்நிலையும் நம்மை இப்படி ஆக்கிவிடுகிறது.ஆனால் பெரும்பாலான முகக்கவசங்கள் ஒரு பயன்பாட்டிற்குப்பின் மறு பயன்பாட்டிற்கு லாயக்கற்றது.

இன்னும் சிலர் பேர் கொரோனாவை விட கொடுமையான சாவில் மாட்டி மரணமடைகிறார்கள்.அதாவது ஷேவிங் லோஷன்,மெத்தனால்,வார்னீஷ், சானிட்டைசர் வரை அனைத்தையும் மதுவுக்கு மாற்றாக நினைத்து உயிரை மாய்ப்பது இன்னும் கொடுமையாக நடந்தேறுகிறது.மேற்கூறிய இரண்டிலும் அறியாமை பெரிதாக மனிதர்களை ஆட்டிப்படைப்பதையே நாம் உணர முடிகிறது. தமது தேவைக்காக உயிரை பணயம் வைத்து நாம் செய்கிற செயல் கடவுள் செய்து தருகிற அற்புதம் என நம்பி வழக்கத்திற்கு மாறாக நாம் செய்வது பெரும்பாலும் நன்மையாக நடந்தாலும் பல இடங்களில் தீமை ஒளிந்து கிடக்கிறது. ஜூகாட் என்கிற மன நிலை என்பது சுடுகாடாக மாறும் நிலையாக கூட மாறும் வாய்ப்புள்ளது.

எச்சரிக்கை என்பதை நீங்கள் வசப்படுத்தினால்தான் அச்சம் என்பதிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.
அசாதரணமான இச்சூழலில் ஒரு நல்ல முகக்கவசத்தை வாங்கியோ அல்லது உருவாக்கி அணிவதே நமது உயிரை பாதுகாக்கும்.நாமும் தொற்றிலிருந்து விலக பலனளிக்கும். 

- கோவிந்த். நீலகண்டன்

From around the web