கடனில் இருக்கும் ஆட்டோ... பணம் தேவையில்லை... நோயாளிகளுக்கு இலவசமாக செல்லும் ஆட்டோ ஒட்டுநர்!!

 
Madurai

மதுரையில் அவசர தேவைக்காக மருத்துவமனை செல்லும் நோயாளிகளை இலவசமாக கொண்டு சென்று விடும் ஆட்டோ ஒட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தில் முழு ஊரடங்கால் பொது போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால் பலர் மருத்துவமனைகளுக்கு செல்ல போதிய ஊர்திகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லட்சுமண பாண்டியன். ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்ற நினைத்த அவர், அவசர மற்றும் மருத்துவ தேவைகளுக்கு தனது ஆட்டோவை இலவசமாக இயக்கி வருகிறார்.

இதில் கவனிக்கத்தக்க விஷயம், ஆட்டோவிற்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத இந்தச் சூழ்நிலையிலும் அவர் இந்தச் சேவையை செய்து வருகிறார்.

அவசரத்திற்கும் மருத்துவத்திற்கும் இலவசம் என்ற பலகையை தனது ஆட்டோவில் அறிவிப்பு பலகையாக வைத்திருக்கும் இவர் ஊரடங்கு காலத்தில் 50க்கும் மேற்பட்ட நபர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

உன்னத சேவையாற்றி வரும் லட்சுமணன் அனைத்து பகுதிகளிலும் தங்கு தடையின்றி சென்று வர இ-பாஸ் வழங்க வேண்டும் என்பதையே அரசிடம் இருந்து பிரதிபலனாக பெற விரும்புவதாக தெரிவிக்கின்றார்.

இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநர் லட்சுமண பாண்டியன் குறித்து சு.வெங்கடேசன் சமூக வலைதளங்களில் பதிவிட அதனை ஓரிசா மாநில தலைமை ஆலோசகர், தமிழறிஞர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டியுள்ளனர். லட்சுமணனின் மனைவி ஒரு தினக்கூலி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 2 வருடமாக லட்சுமணன் ஆட்டோ ஓட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web