முதல்வரை அதிகாரிகள் தொந்தரவு செய்யக்கூடாது... வழக்குத்தொடர்ந்த வழக்கறிஞருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!!

 
High-Court

முதல்வர் மு.க.ஸ்டாலினை அதிகாரிகள் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிடக்கோரி வழக்குத்தொடர்ந்தவருக்கு சென்னை உயிர்நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கொரோனா 2-வது அலை பரவத்தொடங்கிய நேரத்தில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் ஓய்வில்லாமல் பணியாற்றி வருவதாக கூறி சென்னை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் விவேகானந்தர் என்பவர் சென்னை உயிர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில், முதல்வரின் உடல்நலத்தில் அனைவருக்கும் அக்கறை உள்ளது என்றும் தொடர்ச்சியாக அவர் பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவது, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது என்று ஓய்வில்லாமல் உழைத்து வருவதாகவும், இவ்வாறு ஓய்வில்லாமல் பணியாற்றிய குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும் மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதல்வர் ஓய்வு எடுப்பது அவசியம் என்று கூறியுள்ள மனுதாரர், அசாதாரண சூழ்நிலைகள் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் முதல்வருக்கு எந்த கோப்பையும் அனுப்புவது அல்லது அவரின் உத்தரவை கோருவது என தொந்தரவு செய்யக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, முதல்வரும் அதிகாரிகளும் எப்படி செயல்பட வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அந்த அபராதத்தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் அதை கொரோனா நிவாரணத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதுமட்டுமல்லாமல், அடுத்த ஓராண்டிற்கு இந்த மனுதாரர் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யவும் தடை விதித்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

From around the web