தமிழ்நாட்டில் ஆயுதப் போராட்டம்: மாஜி ஈழப் போராளி பதிவால் சர்ச்சை

 
Balan-Seeman

நாம் தமிழர் கட்சி தேர்தல்களில் தோல்வி அடைந்தால் தமிழ்நாட்டில் அடுத்ததாக ஆயுதப் போராட்டம் நடைபெறும் என்று முன்னாள் போராளி பாலன் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் தமிழ்நாட்டில் திமுக அரசை கடுமையாக எதிர்த்து பேசுகின்றனர். சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் ஒவ்வொரு பேச்சும் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சீமான், தாம் கையெழுத்து போட்டு கொடுத்ததால் பிரான்ஸ், சுவிஸ், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் 400-க்கும் மேற்பட்டோர் குடியுரிமை பெற்றுள்ளனர் என கூறியிருந்தார். இது கேலிக்குரியதாகவும் விமர்சனத்துக்குரியதாகவும் மாறி உள்ளது.

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் டெபாசிட்டுகளை இழந்தனர். ஆனால் இது படுதோல்வி அல்ல; நாங்கள் வளருகிற கட்சி. இன்று இல்லாவிட்டால் நாளை வெல்வோம் என சீமான் சமாளித்திருந்தார். விஜய் மக்கள் இயக்கம் கூட வெற்றி பெற்றுள்ளதே என்ற கேள்வி, வேட்பாளர்களின் உள்ளூர் செல்வாக்குதான் காரணம்... விஜய்க்காக மக்கள் ஓட்டு போட்டார்களா என தெரியவில்லை என்றார்.

இந்நிலையில் சீமானின் தீவிர ஆதரவாளரான லண்டனில் வசித்து வரும் பாலன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தேர்தல் பாதையில் செல்லும் நாம் தமிழர் கட்சி தோற்கடிக்கப்பட்டால் ஈழத்தில் நடந்ததுபோல் தமிழ்த்தேசியம் அடுத்த கட்டமான ஆயுதப் போராட்டத்திற்கு நகருமேயொழிய ஒருபோதும் இனி அழிந்துவிடாது. எனவே நாம்தமிழர் கட்சி தோல்விக்காக வருத்தப்பட வேண்டியவர்கள் ஆரியமும் திராவிடமுமே” என அதிர்ச்சியான தகவலைத் தெரிவித்துள்ளார்.

சீமானின் ஆதரவாளரான பாலன், இலங்கையை சேர்ந்த முன்னாள் போராளி. தமிழ்நாட்டில் தனித் தமிழ்நாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவர் தமிழரசனுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தவர். தமிழ்நாட்டின் கொடைக்கானல் தொலைபேசி கோபுரம் தகர்ப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தவர். அண்மைக்காலமாக சீமானின் தீவிர ஆதரவாளராக மாறி இருக்கிறார். அவரது தமிழ்நாட்டில் ஆயுதப் போராட்டம் குறித்து பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

அண்மையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாக செயல்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவோடு தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசன் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சற்குணனுக்கும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கிற வகையிலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கிற முறையிலும் செயல்படும் சீமானை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

தற்போது சீமானின் ஆதரவாளரான பாலன், தமிழகத்தில் சீமான் ஆயுதப் போராட்டத்தை நடத்துவார் என பகிரங்கமாக பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web