மீண்டும் தமிழ்நாடு அரசு பணிக்கு திரும்பும் இன்னொரு அதிரடி ஐஏஎஸ் அதிகாரி; யார் இந்த அமுதா?

 
Amutha-IAS

தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதின் பேரில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா ஒன்றிய அரசு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளரான அமுதா ஐ.ஏ.எஸ் மீண்டும் தமிழக பணிக்கு திரும்புகிறார். தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதின் பேரில் ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா ஒன்றிய அரசு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழகப் பணிக்கு மீண்டும் திரும்புகிறார் அமுதா.

தற்போது பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்த சூழலில் அமுதா ஐ.ஏ.எஸ் அவர்களின் சேவை நமது மாநிலத்திற்கு தேவை என்று தமிழ்நாடு அரசு கருதியது.

மதுரையைச் சேர்ந்த அமுதா பெரியசாமி இளங்கலை விவசாய அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவர். 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஐ.ஏ.எஸ் பேட்ச்சை சேர்ந்தவர். இவர், கடந்த 27 வருடங்களாக பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து திறம்படச் செயல்பட்டு வருபவர்.

தமிழ்நாட்டின் முதல் பெண் தொழிலாளர் நல ஆணையர், கபடி விளையாட்டில் மூன்றுமுறை தேசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்றவர் என்ற பெருமைக்கு உரியவர் அமுதா பெரியசாமி.

அமுதா ஐ.ஏ.எஸ்., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக அஇருந்தபோது, செங்கல்பட்டில் மணல் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது, மணல் ஏற்றிவந்த லாரி அவரை இடித்துக் கீழே தள்ளிவிட்டுச் சென்றது. ஆனாலும், பின்வாங்காமல் தொடர்ந்து அந்தப் பகுதியில் மணல் கொள்ளை நடைபெறாமல் தடுத்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, ஏராளமான மகளிர் சுயஉதவிக் குழுக்களை அமைத்து, பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கப் பயிற்சி அளித்து, அவர்களுக்கு வங்கிகளின் கடன் பெற்றுத்தந்தார். பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய மாணவிகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து, படிப்பைத் தொடர வழிசெய்தார்.

கடந்த 2015-ம் ஆண்டில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்த பெருமழை வெள்ளத்தில் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தபோது பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் அதிகாரிகள் குழுவில் சிறப்பு அலுவலராக அமுதா நியமிக்கப்பட்டு, திறம்படச் செயலாற்றினார்.

Amutha-IAS

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், உதவி தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றினார். 2018-ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் உடல் அடக்கத்தின்போது ஒட்டுமொத்த நிகழ்வையும் ஒருங்கிணைக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியை பொறுப்புடன் செய்து முடித்தார்.

அனைவரையும் ஒருங்கிணைத்து, எந்தவொரு சலசலப்பும் இல்லாமல், பாதுகாப்புக் குறைபாடுகள் ஏற்படாமல் அமுதா செயல்பட்ட விதம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

இதையடுத்து, பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக ஒன்றிய அரசின் கீழ் நியமிக்கப்பட்ட அமுதா ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதின் பேரில் மீண்டும் தமிழக பணிக்கு திரும்பவிருக்கிறார். அவரது தமிழ்நாடு வருகை பொதுமக்கள் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

From around the web