அதிமுக ஆதரவு வேட்பாளர்கள் எங்களை ஏமாத்திட்டாங்க; மறுதேர்தல் நடத்துங்க..!

 
Kanchipuram

தங்க நாணயம் என பித்தளையை கொடுத்து ஏமாற்றி எங்கள் வாக்குகளை வாங்கி விட்டனர். எனவே, மறுதேர்தல் நடத்த வேண்டும் என கொழுமணிவாக்கம் கிராம வாக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொழுமணிவாக்கம் ஊராட்சியில் கடந்த 9-ம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. 2,500க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள இங்கு, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு கட்சி ஆதரவுடனும், சுயேட்சையாகவும் பலர் போட்டியிட்டனர்.

இதில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அதிமுக ஆதரவுடன் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட சாரதா விநாயகம் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு சங்கு சின்னத்தில் போட்டியிட்ட சித்ரா ஆகியோர் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக்கூறி வாக்காளர்களுக்கு தங்க நாணயம் கொடுத்துள்ளனர்.

Kanchipuram

இந்நிலையில், வாக்களிக்கச் சென்றபோது கொடுத்த அந்த தங்க நாணயத்தை இன்று சிலர் அடகு வைக்கச் சென்றுள்ளனர். அப்போது, அந்த நாணயம் தங்கம் அல்ல, பித்தளை என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது, “வாக்குப் பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுத்தால் தெரிந்துவிடும் என்ற காரணத்தால் வாக்கு செலுத்த செல்லும்போது வாக்காளர்களை அழைத்து அவர்கள் கைகளில் மறைவாக தங்க நாணயம் எனக்கூறி கொடுத்தனர்.

Gold-coin

இதனால், வேறு வேட்பாளருக்கு வாக்களிக்க இருந்த வாக்காளர்கள் அதிமுக மற்றும் அவர்களைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்களுக்கு வாக்களித்துள்ளனர். எனவே, நூதன முறையில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

அத்துடன், “இந்த ஊராட்சியில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி, மறு தேர்தல் நடத்த வேண்டும்” என, அங்கு போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

From around the web