தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி... திமுகவோ ‘ஜஸ்ட் 97’... சொல்வது யார் தெரியுமா..?

 
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி... திமுகவோ ‘ஜஸ்ட் 97’... சொல்வது யார் தெரியுமா..?

திமுகதான் அடுத்து ஆட்சி அமைக்கும் என்று எக்ஸிட்போல்கள் வெளியான நிலையில், மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க போகிறது என்று நியூஸ் ஜெ கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 6-ந் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக கூட்டணி களம் காண்கிறது. நாம் தமிழர் தனியாக களம் இறங்கியுள்ளது.

இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில், நேற்று பல்வேறு நிறுவனங்கள் நடத்திய எக்ஸிட் போல்களில் திமுகவுக்கே பெரும்பான்மை என்ற கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில், திமுக கூட்டணி 170 முதல் 190 வரையிலான தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும், அதிமுக கூட்டணி 60 முதல் 70 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அமமுகவுக்கு 4 முதல் 6 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடும் என்றும், அதே சமயம், பிற கட்சிகளள் எதுவும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் கூறியிருந்தது.

இந்த முறை அதிமுக வெற்றி பெறுவதே சந்தேகம் என்றுதான் முன்பிருந்தே அரசியல் நோக்கர்களும் சொல்லி வரும் நிலையில், நியூஸ் ஜெ சேனலில் ஒரு கணிப்பு வெளியாகியுள்ளது. மண்டல வாரியாக பிரித்து கணித்து, அதிமுகதான் வெற்றி என்று அறுதியிட்டு சொல்லி உள்ளனர்.

அதில், மத்திய மண்டலத்தில் உள்ள 48 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 25 இடங்களை கைப்பற்றும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் உள்ள மொத்தம் 46 தொகுதிகளில் 20 தொகுதிகளில் அதிமுகதான் வெற்றி பெறும் என்றும், வடக்கு மண்டலத்தில் உள்ள மொத்தம் 43 தொகுதிகளில் 30 இடங்களை அதிமுக கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, தென்மண்டலங்களில் உள்ள 47 தொகுதிகளில் 23 தொகுதிகளையும், மேற்கு மண்டலத்தில் உள்ள 50 தொகுதிகளில் 39 தொகுதிகளை அதிமுகவும் வெல்லக்கூடும் என்று அந்த கணிப்பு கூறுகிறது.

மொத்தமாக, 234 தொகுதிகளில் 137 தொகுதிகளில் அதிமுகவே ஜெயிக்கும், அந்த வகையில் மீண்டும் அதிமுகவே ஆட்சி கட்டிலில் அமரும் என்றும் அந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிமுகவுக்கு 45 சதவீத வாக்குகளை அள்ளும் என்கிறார்கள்.

ஆனால் திமுகவோ வெறும் 97 மட்டும்தானாம். பிற கட்சிகள் அதுகூட கிடையாதாம். ஒரு இடத்தில் கூட ஒரு கட்சியும் ஜெயிக்காது என்று அந்த கணிப்பில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. எல்லாப் பேரும் திமுக பக்கமே வெளிச்சத்தை திருப்பி வரும் நிலையில் நியூஸ் ஜெ மட்டும் அதிமுக பக்கம் திருப்பி விட்டு தொண்டர்களை சற்று ஆறுதல்படுத்தியுள்ளது.

From around the web