ஆயுத பூஜை விடுமுறைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்..!

 
Bus

ஆயுத பூஜை பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வோர் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 14-ம் தேதி ஆயுத பூஜை, 15-ம் தேதி விஜயதசமி. இந்த இரண்டு நாட்களும் அரசு விடுமுறை தினமாகும். அடுத்து வரும் 16-ம் தேதியும், 17-ம் தேதியும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாகும். மொத்தமாக 4 நாட்கள் விடுமுறை வருவதால் சென்னையில் பணிபுரியும் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.

இதையொட்டி, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் கூட்ட நெரிசல் ஏற்படாமல் வசதியாக செல்லும் வகையில் வரும் 12 மற்றும் 13-ம் தேதிகளில் தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதன்படி, தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம், திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதேபோன்று, பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவில், திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, தென்காசி, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

From around the web