சேலம், நாமக்கல்லில் ரூ.501.63 கோடி அளவில் பயிர்கடன் வழங்கப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி

 
IPeriyasamy

சேலம், நாமக்கல்லில் ரூ.501.63 கோடி அளவில் பயிர்கடன் வழங்கப்படும் என்று கேள்வி நேரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. இதில் தமிழக கவர்னராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என். ரவி உரையாற்றினார். கவர்னர் உரை நிறைவு பெற்ற பிறகு அலுவல் கூட்டம் நடைபெற்று, சட்டசபை ஜனவரி 7-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபையின் மூன்றாம் நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கேள்வி பதில் நேரத்துடன் தொடங்கியது. இன்றைய தினமும் கேள்வி பதில் பகுதி மட்டும் நேரலை செய்யப்படுகிறது. தற்போது எம்எல்ஏக்கள் கேட்கும் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

நாகை மாவட்ட கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீன்பிடி துறைமுகம் தொடர்பாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஷா நவாஸ் சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதில் அளித்து பேசுகையில், “நாகை, சாமந்தான்பேட்டை பகுதியில் தூண்டில் வளைவுடன் கூடிய சிறு மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தூண்டில் வளைவுடன் மீன்பிடி துறைமுகம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.” என்று அவர் தெரிவித்தார்.

விளாத்திகுளத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படுமா? என்று சட்டசபை உறுப்பினர் மார்க்கண்டேயன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், “விளாத்திகுளத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க சாத்தியக் கூறு இல்லை” என்று தெரிவித்தார்.

தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினசரி கூலி ரூ.500 ஆக உயர்த்த அரசு முன்வருமா? என்றும், கூடலூர் தொகுதியில் மின்வசதி இல்லாத இடங்களில் மின் இணைப்பு வழங்கப்படுமா? என்றும் சட்டசபை உறுப்பினர் பொன்.ஜெயசீலன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ராமச்சந்திரன், “தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினசரி கூலி ரூ.500 ஆக உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது. மின் பிரச்சினையை தீர்க்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க இயலாத சூழல் உள்ளது என்றும் ஒன்றிய அரசு மண்ணெண்ணெய் விநியோகத்தை குறைத்து விட்ட நிலையில் கூடுதலாக பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

சங்கரன்கோவில் தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுமா? என்று சட்டசபை உறுப்பினர் ராஜா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் காந்தி, “சங்கரன்கோவில் தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வாய்ப்பில்லை. திருப்பூர், காஞ்சிபுரம், பல்லடம், நாகை உள்ளிட்ட 5 இடங்களில் புதிதாக ஜவுளி பூங்காக்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன” என்று அவர் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுமா? என்று எம்எல்ஏ மு.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

குளித்தலை சார்பதிவாளர் அலுவலகத்தில் புதிய கட்டடம் கட்டப்படுமா? என்று எம்எல்ஏ ரா.மாணிக்கம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, “குளித்தலை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

மொடக்குறிச்சி வட்டத்தில் புதிய சார் கருவூலம் அமைக்கப்படுமா? என்று பாஜக எம்எல்ஏ சரஸ்வதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “மொடக்குறிச்சி வட்டத்தில் புதிய சார் கருவூலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கப்படும் என்று 110 விதியின் கீழ் பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு வெளியிட்டார். மேலும் சேலம், நாமக்கல்லில் ரூ.501.63 கோடி அளவில் பயிர்கடன் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

From around the web