3 ஆயிரம் படுக்கைகள் தயார்! மாநிலம் முழுவதும் 12 ஆயிரத்து 370 ஆக்சிஜன் வசதி படுக்கைகள்! 

 
3 ஆயிரம் படுக்கைகள் தயார்! மாநிலம் முழுவதும் 12 ஆயிரத்து 370 ஆக்சிஜன் வசதி படுக்கைகள்!

வட மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை மிகவும் உக்கிரமாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு புறம் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுக் கொண்டுள்ளது. இன்னொரு பக்கம் ரெம்டெசிவிர் மருந்து கொள்முதல் செய்யப்பட்டு அரசு சார்பில் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில் ஆக்சிஜன் உதவி தேவைப்படுவோர்களுக்காக 12 ஆயிரத்து 370 ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகள் தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மருத்துவத் தலைமையிடமாகத் திகழும் தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால், படுக்கை வசதி இல்லாமல் கொரோனா இறப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் சுகாதாரத்துறை முனைப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. போர்க்கால அடிப்படையில் மாநிலம் முழுவதும்  பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவகத்தில் இருந்து தினசரி பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது.

நேற்றைய நிலவரப்படி 3 ஆயிரம் படுக்கைகளில் புதிதாக ஆக்சிஜன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கும் இடத்தில் இருந்து ஒவ்வொரு படுக்கைகளுக்கும் 2 குழாய்கள் மூலம் காற்று மற்றும் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இது செயல்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது இந்த 3 ஆயிரம் படுக்கைகளும் உடனடியாக பயன்பாட்டுக்கு வந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 9 ஆயிரத்து 370 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

புதிய ஆட்சி விரைவில் மலர உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா மரணங்கள் எதுவும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

From around the web